Tuesday, April 5, 2011

கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு

ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.


ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.

கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடல் நீரை யாரும் குடிக்கவோ அல்லது இப்பகுதியில் நீந்தவோ மீன்பிடிக்கவோ போவதில்லை என்பதால் கடலில் அதிக கதிரியக்கம் கலந்திருந்தாலும் மனிதர்களின் உடல் நலத்துக்கு அதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எங்கிருந்து வருகிறது கதிரியக்கம்?

ஆனால் கடலில் கலக்கும் இந்தக் கதிரியக்கம் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய முடியாமல் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேதமடைந்த அணு உலைகளில் ஒன்றிலிருந்து கசியும் கதிரியக்கம் நிலத்தடி நீரில் கலந்து அதன் வழியாக கடலுக்குள் வருகிறது என்பதற்கான சாத்தியம் உண்டு.

ஏனென்றால் சாதாரணமாகக் காணப்படும் கதிரியக்கத்தை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான கதிரியக்கம் கொண்ட நீர் முதலாவது மற்றும் மூன்றாவது அணு உலைகள் அருகே காணப்பட்டுள்ளது.

இதேயளவு கதிரியக்கம் கொண்ட தண்ணீர் அணுவுலைகள் இரண்டாம் மற்றும் நான்காம் இலக்க அணு உலைகள் அருகிலும் காணப்பட்டுள்ளது.

இந்தத் நீர் அணு உலைகளில் இருந்து வருகிறதா அல்லது பயன்பாட்டுக்குப் பின்னர் சேமித்துவைக்கப்பட்டுள்ள அணு எரிபொருள் கழிவுத் தேக்கத்திலிருந்து வருகிறதா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

கதிரியக்க நீரை அகற்றுவதிலும், அணு உலைகளின் சூட்டைத் தணிப்பதற்காக கடல் நீர் அல்லாமல் வேறு இடத்திலிருந்து நீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment