Sunday, May 1, 2011

மின் தடை அதிகரிப்பால் மக்களிடம் எதிர்ப்பு வலுக்கிறது: குளறுபடியான நடைமுறைகளே பிரச்னை

காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கத் துவங்கிய நிலையிலும் மின்வெட்டு தொடர்வதால், மக்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது. கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தையும், குளறுபடியான நடைமுறையால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மின் வினியோகம் இப்போதைக்கு சீராக வாய்ப்பில்லை.


தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை. உதாரணமாக, ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தேசிய அனல்மின் நிறுவனமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் கூட்டாக உத்தேசித்த திட்டம் என, பல திட்டங்கள் உள்ளன. தற்போது, தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தி நிறுவுதிறன், 15 ஆயிரத்து 100 மெகாவாட் ஆகும். ஆனால், இவற்றில் இருந்து, தற்போது 8,000 முதல் 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகி வருகிறது. நமது தேவை தற்போது 10 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. 1,500 மெகாவாட் வரை மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால், மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிட்டது. தி.மு.க., ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் மின் உற்பத்தியை பெருக்க பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியை துவக்க, அதிகளவில் ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டன. 2008ம் ஆண்டு ஜூலை, மின் தேவை, உற்பத்தியை விட அதிகமானதால் தீவிரத்தை உணர்ந்து, மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. சட்டசபை தேர்தலுக்காக கூடுதல் விலை கொடுத்து மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கினாலும், 2 மணி நேர மின் வெட்டு தொடர்ந்தது. ஏப்., 21ம் தேதி, "மின் பற்றாக்குறையை சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் வெட்டு இருக்கும் என்று தமிழக மின் வாரியம் அறிவித்தது. மேலும்நாளொன்றுக்கு,ரூ.50 கோடிக்கு மின்சாரத்தை வாங்கியும் சமாளிக்க முடியவில்லை' என்று, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெனரேட்டர் மூலம் தனியார் தயாரிக்கும் மின்சாரத்துக்கும் வரி விதிக்கப்படுமென்ற புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நிலவும் மின்வெட்டை சமாளிக்க முடியாத அரசு, பிரச்னையை சிக்கலாக்கும் வகையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. ஏப்ரல் இறுதியில் காற்று வீசத் துவங்கியதால், காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதை மின்வாரியம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. காற்றாலை மின்சாரத்தை வழங்கிய தனியார் நிறுவனங்களுக்கு,ஓராண்டாக பணம் தரப்படாமல் உள்ளது. காற்றாலை மூலம் இரண்டு மாதங்களுக்கு தான் மின்சாரம் கிடைக்கும். அதன்பின், மழையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, இப்போதைக்கு மின் வினியோகம் சீராகும் வாய்ப்பில்லை. இதனால், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிகரிக்கும் மின் தேவை: வழக்கமாக, தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு ஆண்டுக்கு 300 மெகாவாட் மின்சாரம் வரை தேவை அதிகரிக்கும். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட அபரிமிதமான தொழில்வளர்ச்சியால் 1,400 மெகாவாட்டாக, மின் தேவை அதிகரித்துள்ளது. மத்திய மின்துறை ஆய்வின் அடிப்படையில், தமிழகத்திற்கு 2010-11ம் ஆண்டு 12 ஆயிரத்து 860 மெகாவாட்டும், 2011-12ம் ஆண்டில் 14 ஆயிரத்து 224 மெகாவாட்டும், 2012-13ம் ஆண்டில் 15 ஆயிரத்து 517 மெகாவாட்டும், 2013-14ம் ஆண்டில் 16 ஆயிரத்து 927 மெகாவாட்டும் மின் தேவை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய மின்துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்ட தகவல்படி, 2010-11ம் ஆண்டில் 1,459 மெகாவாட்டும், 2011-12ம் ஆண்டில் 2,292 மெகாவாட்டும், 2012-13ம் ஆண்டில் 847 மெகாவாட்டும், 2013-14ம் ஆண்டு 1,360 மெகாவாட்டும் கூடும் மின் உற்பத்தித் திறனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், 2010-11ம் ஆண்டில் 1,313 மெகாவாட்டும், 2011-12ம் ஆண்டில் 1,048 மெகாவாட்டும், 2012-13ம் ஆண்டில் 1,621 மெகாவாட்டும், 2013-14ம் ஆண்டில் 1,875 மெகாவாட்டும் பற்றாக்குறை இருக்கும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: Dinamalar

அதோடு மின்கட்டணம் செலுத்தும் முறையிலும் தேவையில்லாத மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 15ம் தேதி மின் அலுவகத்தில் ஏற்படும் கூட்டநெரிசலை சமாளிக்க, மின் கட்டணம் கணக்கிட்ட நாளில் இருந்து 20 நாள்களுக்குள் கட்டவேண்டும். பயனாளி வீட்டில் இல்லாத போது கணக்கெடுக்கப்பட்டால் அவருக்கு எப்படி கடைசிநாள் தெரியும்? பழைய முறையில் 15ம் தேதி மின் கட்டணம் செலுத்த ஞாபகம் இல்லாதவருக்கு கூட பக்கத்து வீட்டுக்காரர் மூலம் தெரியவரும். அதுவும் இந்த முறை இரண்டு மாதம் என்பதற்கு முன்பதாகவே 21 நாள் இருக்கும் போதே மின் கட்டணம் செலுத்தும் நாள் வந்து விட்டது. இதனால் நிறைய இடங்களில் கடைசிநாள் தாண்டி மின் கட்டணம் செலுத்தி பலர் அபராதம் செலுத்தி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment